தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியதால், தமிழக அரசு அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே அசோகா தூண் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த ஜூலை 29-ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், இந்த சிலை நிறுவுதல் மற்றும் சுற்றுப்புறத்தை அழகுபடுத்துதல் போன்ற பணிகளுக்கான டெண்டர், திறப்பு விழா நடைபெற்ற பிறகு, ஆகஸ்ட் 6-ம் தேதிதான் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அதாவது, சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவும் முடிந்த பிறகே, அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது வெளிப்படையான முறைகேடு என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பணிகளுக்கான டெண்டர் மதிப்பு ரூ.27.30 லட்சம் என மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஊழல் புகார் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தாம்பரம் மாநகர ஆணையர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்-ஐ உடனடியாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளது.
மேலும், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, இனி தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திடீர் மாற்றம், அரசு அதிகாரிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
