பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மன்றம் அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர்கள் அதன் தலைவராக செயல்பட வேண்டும். தினமும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்துகள் பகிரப்பட வேண்டும். என்.சி.சி, என்.எஸ்.எஸ், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சாலை விதிகள் குறித்த பயிற்சிகள் பெறவும், போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், வாகனத்தை பறிமுதல் செய்து, பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கு வெளியே மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்க தேவையான அறிவுரைகளை காலை வணக்கக் கூட்டத்தில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

