ஸ்ரீவில்லிபுத்தூரில் 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கமிட்டால் குண்டு வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த நபர்களை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என இரு இளைஞர்கள் காவல் துறையினர் முன்பே மிரட்டல் விடும் காணொளியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தைக் கேட்டு கொதித்தெழும் அளவிற்கு இந்த இளைஞர்களின் மூளை எவ்வாறு சலவை செய்யப்பட்டது என்று மனம் குழம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றிலும் காவல்துறையினர் இருக்கும் போதே பயங்கரவாத தொனியில் மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு தைரியம் கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னிருந்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்றுவிட்டு, பின்பு விடுதலை செய்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த இளைஞர்களின் பின்னணியையும் அவர்களின் தீவிரவாத சிந்தனையையும் காவல்துறையினர் முறையாகவும் தீர விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் நேராத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசை தமிழக சார்பாக வலியுறுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
