டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த 10 பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வு செய்து வெளியிட்டுள்ள பட்டியல், ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு 4-வது இடமும், நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு 7-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தை மறைத்து வீரர்களை வரிசைப்படுத்தும் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த், ஆஸ்திரேலியாவின் மாபெரும் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு முதலிடம் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 என்ற நம்ப முடியாத சராசரியுடன் 29 சதங்கள் விளாசிய பிராட்மேன், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பிராட்மேனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கார்பீல்ட் சோபர்ஸ் 2-வது இடத்தையும், விவ் ரிச்சர்ட்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். டெஸ்ட் அரங்கில் 15,921 ரன்கள் மற்றும் 51 சதங்களுடன் முதலிடத்தில் நீடிக்கும் சச்சின் டெண்டுல்கரை, ஸ்ரீகாந்த் 4-வது இடத்தில் வைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா 6-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் விராட் கோலிக்கு 7-வது இடத்தை வழங்கி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,230 ரன்களும் 30 சதங்களும் அடித்துள்ள கோலி, தனது கடைசி சில ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஃபார்ம் இழந்து தவித்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த வரிசையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்களான கிரெக் சேப்பல் 8-வது இடத்திலும், 13,378 ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங் 9-வது இடத்திலும் உள்ளனர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியல், தற்போது இணையத்தில் பரவி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களை கிளப்பி உள்ளது.

