இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக, பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ் தரும் மின்சார இருசக்கர வாகனங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, இ-ஸ்கூட்டர்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
ஸ்ப்ரின்டோ நிறுவனத்தின் Sprinto HS இ-ஸ்கூட்டர், அதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இதன் விலை ரூபாய் 86 ஆயிரம் முதல் ரூபாய் 97 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரில் 2.52 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஆகும். இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Sprinto HS இ-ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதில் லித்தியம் அயன் பேட்டரி, அலாய் சக்கரங்கள் மற்றும் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் ஆகும்.
மேலும், எல்இடி முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர் விளக்குகள், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக், அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இந்த Sprinto HS இ-ஸ்கூட்டர் 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. இருக்கை உயரம் 700 மி.மீட்டர், கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். இதன் எடை 100 கிலோ ஆகும். ட்ரிப் மீட்டர், ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் வசதி கொண்டவை. வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது.
எடை குறைவாக இருப்பதாலும், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஓட்டுவதற்கு மிகவும் உகந்ததாக இருப்பதாலும் இந்த Sprinto HS இ-ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் சிம்பிள் எனர்ஜி இ-ஸ்கூட்டரை விட ஸ்ப்ரின்டோ இ-ஸ்கூட்டர் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. ஸ்ப்ரின்டோ நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்கள் மொத்தம் 1878 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. பிகாஸ், ஏம்பயர், ரிவர் இண்டி போன்ற இ-வாகனங்களுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் நிறுவனமாக ஸ்ப்ரின்டோ திகழ்கிறது. எதிர்காலத்தில் இந்திய சந்தையில் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிக மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கும் பணியிலும் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.