பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட, ஸ்மூத்தியாக தயாரித்து அருந்தும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மூத்தி எப்படிப்பட்ட பலன்களைத் தருகிறது என்பதை விரிவாகக் காண்போம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள், உலர் பழங்கள், உலர் விதைகள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தியில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. ஸ்மூத்தி தயாரிப்பின்போது எந்தவிதமான கழிவுகளும் வீணடிக்கப்படுவதில்லை. ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பொருட்களே ஒரு வேளைக்கான சரிவிகித உணவாகக் கருதப்படுகிறது.
ஸ்மூத்தி தயாரிப்பில் சோயாப்பால், தேங்காய் பால், நிலக்கடலை பால் போன்ற தாவரப் பால் வகைகளும், தேன், ஸ்டீவியா, ஸிரப்புகள் போன்ற இனிப்பூட்டிகளும், பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் இதில் சாக்லேட் சிப்ஸ்கள் மற்றும் ஐஸ்கிரீம் கூட சேர்ப்பதுண்டு.
ஸ்மூத்தி அருந்துவதால் ஒரு நாளுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவு கிடைக்கிறது. இது உடல் எடை குறைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், சருமத்திற்கு பளபளப்பையும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவி, இளமையான தோற்றத்தைப் பெறவும் இது வழிவகுக்கிறது.
குறிப்பாக, ஸ்மூத்தி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதோடு, செரிமான மண்டலமும் தூண்டப்படுகிறது. உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்கள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் சீராகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
மேலும், ஸ்மூத்தி அருந்துவது நல்ல உறக்கத்திற்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் வழிவகுக்கிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதால், அன்றாடப் பணிகளில் செயல்திறன் கூடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஸ்மூத்தியை ஒரு ஆரோக்கியமான பானமாகப் பருகி அதன் நன்மைகளைப் பெறலாம்.

