பட்டாசு தொழில்முனைவோரை நசுக்காதீர்கள்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசு தொழில்முனைவோரை 'ஆய்வு' என்ற பெயரில் அரசு நசுக்குவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் சிவகாசி பட்டாசுத் தொழிலை த.வெ.க. அரசின் தேவையற்ற கெடுபிடிகள் கடுமையாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுக்கு சுமார் ரூ.6000 கோடி வர்த்தகம் நடக்கும் இந்தத் தொழிலை நம்பி 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிகின்றனர். நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்யும் இந்தப் பட்டாசுத் தொழில், இன்று அரசின் நடவடிக்கைகளால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பவர்கள் அல்லது பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், அனைத்துச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு, உரிய அரசுத் துறைகளிடம் நாக்பூர், மெட்ராஸ் உள்ளிட்ட முறையான உரிமங்களைப் பெற்று, ஆண்டுதோறும் புதுப்பித்துத் தொழில் நடத்திவரும் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் 'அதிரடி ஆய்வு' என்ற பெயரில் அரசு நிர்வாகமும் அதிகாரிகளும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கண்டனத்திற்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கவிருக்கும் சூழலில், அதிகாரிகளின் தேவையற்ற சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பூர்வமாக வரி செலுத்தி, உரிமம் பெற்று வணிகம் செய்யும் வர்த்தகர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி, ஆய்வுகள் என்ற பெயரில் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்குவது நியாயமற்ற செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பட்டாசுத் தொழிலில் பெருமளவில் கிராமப்புறப் பெண்களும், எளிய மக்களுமே ஈடுபட்டுள்ளனர். அரசின் கெடுபிடிகளால் தொழிற்சாலைகளும் கடைகளும் முடங்கும்போது, அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சிவகாசி மாநகரத்தின் வர்த்தகச் சங்கிலி அறுந்துபோனால், அது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் வர்த்தகச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் 'ஆய்வு' என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் த.வெ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டுதல்களையும் வழங்கும் அணுகுமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எவ்வித அச்சமுமின்றித் தங்களது வணிகத்தைத் தொடரத் தேவையான சூழலை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version