10-வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்ற அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் பிரபு வழக்கு தொடர்ந்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருந்ததாகவும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியுள்ளார்.
குறிப்பாக, வேட்புமனுவில் சான்றளித்து கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகியிருந்த நிலையில், அந்த காலாவதியான சான்றொப்பத்தை ஏற்றுக்கொண்ட கோபிசெட்டிப்பாளையம் தேர்தல் அதிகாரியின் செயல் சட்டவிரோதம் என்றும், எனவே செங்கோட்டையனின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது முறையற்றது என்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த ஆண்டு நடிகர் விஜய் தலைமையில் தவெக கட்சியில் இணைந்தார். அங்கு அவர் கட்சியின் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன், 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.