சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில், Tally மற்றும் அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 250 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சத்யராஜ் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தென்னிந்தியாவிலேயே சிறந்த கணினி கல்வியகமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இது அரசு நடத்தும் கல்வியகம் அல்ல என்றும், திமுகவைச் சார்ந்தவர்களின் உழைப்பில் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதாகவும் விளக்கினார்.
இதுவரை 1,430 மாணவ, மாணவிகள் இங்கு பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர் என்றும், அவர்களின் குடும்பங்களையும் கணக்கில் கொண்டால், இந்த மையத்தின் பயன் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, எந்தவித கட்சி பாகுபாடுமின்றி இந்த மையம் நடத்தப்படுவதாகவும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் இது பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
சைதாப்பேட்டையில் 475 பெண்கள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோ ஓட்டுவதாகவும், இதற்காக ஒரு ஆட்டோவுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில ஆட்டோக்களில் வேறு கட்சிக் கொடிகள் பறப்பதாக கூறப்பட்டாலும், அவர்களின் வாழ்க்கையில் திமுகதான் விளக்கேற்றியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள மூத்தோருக்கான சிறப்பு மருத்துவமனை குறித்தும், கிண்டி ரேஸ் கோர்ஸில் அமையவுள்ள சுற்றுச்சூழல் பூங்கா குறித்தும் அவர் பேசினார். தேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல என்றும், மாணவர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியே தேர்தலுக்கான வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், திமுக ஒரு கட்சி மட்டுமல்ல, அது சமூகத் தொண்டு மற்றும் சமூக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் என்று புகழாரம் சூட்டினார். மக்களின் சேவையும், சமூகத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றுவதுமே திமுகவின் முக்கிய குறிக்கோள் என்றும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த நோக்கம் மாறாது என்றும் அவர் கூறினார்.
கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என நம்புவதாகவும் சத்யராஜ் தெரிவித்தார். கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் திமுக பின்பற்றுவதாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் முதன்மை மாநிலமாக உருவானது என்று குறிப்பிட்ட சத்யராஜ், தற்போதுள்ள ஆட்சியாளர்கள் திட்டங்களின் பெயர்களை மாற்றினாலும், திட்டங்களை மாற்றாமல் தொடர வேண்டும் என்றும், மக்கள் நலனே முக்கியம் என்றும் வலியுறுத்தினார். திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது என்றும் அவர் கூறினார்.
திமுக இயக்கம் தமிழ்நாட்டின் நலனுக்காக எப்போதும் பாடுபடும் என்றும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் சத்யராஜ் தெரிவித்தார். 'ஆளுங்கட்சியாக இருக்கும்போது அட்டையாக ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல, திமுகவின் கட்டப்பன் நான் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்' என்று அவர் பேசியது அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டில் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு, தமிழ்நாடு நன்றாக இருப்பதுதான் காரணம் என்றும், திமுக இயக்கம் தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவலனாக இருக்கும் என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
