2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடி, இந்தியாவிற்கு கோப்பையை வென்று தர வேண்டும் என இந்திய வீரர் ரிங்கு சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஒரு குறிப்பிட்ட வகை கிரிக்கெட்டிற்கு மட்டும் உரிய வீரர் என்ற எண்ணத்தை மாற்றி, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோஸ்டார் தளத்திற்கு அளித்த பேட்டியில் ரிங்கு சிங் கூறுகையில், 'விராட் பாய், ரோஹித் பாய் இருவரும் ஜாம்பவான்கள். நான் மட்டுமல்ல, அவர்கள் இருவரும் 2027 உலகக் கோப்பையில் விளையாடி, கோப்பையை வெல்லும் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பமாக உள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு மிகப்பெரிய தருணமாக அமையும். ஏனெனில், இது அவர்களின் கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம். எனவே, அவர்கள் நமக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். நாம் உலகக் கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகிவிட்டது, கடைசியாக 2011-ல் வென்றோம். அதனால், அவர்கள் இருவரும் அணியில் இருந்து, அந்த கோப்பையை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
தற்போது, ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் மக்கள் என்னை அடையாளம் காண்கிறார்கள். ஆனால் எனது தற்போதைய எண்ணம் என்னவென்றால், இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே. அணியின் ஒரு பகுதியாக இருந்து, எனது பேட்டிங் பங்களிப்பின் மூலம் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவ வேண்டும். அந்த ஐந்து சிக்ஸர்களை விட, உலகக் கோப்பையை வென்று கொடுத்ததற்காக மக்கள் என்னை அதிகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்றும் அவர் தனது கனவை விவரித்தார்.
'நான் ஒரே ஒரு வடிவிலான போட்டியில் மட்டுமே விளையாடக்கூடிய வீரர் என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் எனது ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளின் சராசரியைப் பார்த்தால் அது உங்களுக்கே தெரியும். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கு உள்ளது. எனவே, என்னை ஒரு குறிப்பிட்ட வடிவிலான ஆட்டத்திற்கான வீரராக மட்டும் பார்க்க வேண்டாம். என்னால் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட முடியும், உள்நாட்டு போட்டிகளில் நான் மூன்று வடிவங்களிலும் விளையாடியும் வருகிறேன். ஆனால் தற்போது இந்திய அணிக்காக ஒரு வடிவிலான போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறேன்' என ரிங்கு சிங் குறிப்பிட்டார்.
கேப்டன்ஷிப் பொறுப்பைப் பொறுத்தவரை நான் இன்னும் வளர்ந்து வருகிறேன். யுபி (UP) லீக்கில் நான் கேப்டனாக செயல்பட்டு எனது அணியை சாம்பியன் ஆக்கினேன். கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக இருந்தேன். எனவே கேப்டன்சியின் நுணுக்கங்களை நான் கற்று வருகிறேன். கேகேஆர் அணியில் அஜ்ஜு பாய் போன்ற பலரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். சூர்யா பாயுடன் நான் நிறைய விளையாடி இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் அவர் எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். எனது தலைமைப் பண்புகளை மேம்படுத்தி வருகிறேன், எதிர்காலத்தில் கேப்டன்ஷிப்பில் எனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்' என்றும் அவர் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
