அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை மக்களிடம் வேகமாக கொண்டு சேர்க்க வேண்டுமானால், 'கிரிக்கெட்' என்ற பெயரை தவிர்த்துவிட்டு, வெறும் 'டி20' என்று மட்டுமே அழைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு அதிரடி யோசனையை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க விளையாட்டு சந்தையைக் கைப்பற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாண்டிங், இந்த விளையாட்டை அங்கு பிரபலப்படுத்த 'கிரிக்கெட்' என்ற பெயரை ஓரமாக ஒதுக்கிவிட்டு, முற்றிலும் 'டி20' என்ற புதிய அடையாளத்துடன் மட்டுமே விளம்பரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பாரம்பரியம் இல்லாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் 'கிரிக்கெட்' என்ற பெயரை கேட்டாலே அது ஐந்து நாட்கள் இழுத்தடிக்கும் போட்டி என்று நினைத்துக் கொள்வதாக பாண்டிங் கூறினார். எனவே அமெரிக்கர்களுக்குப் புரிய வைக்க, அந்நாட்டின் பிரபல பேஸ்பால் ஆட்டத்துடன் இதை ஒப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பேஸ்பால் போட்டியில் ஒரு ஆட்டத்திற்கு ஒரு ஹோம் ரன் அடிப்பதே கடினம், ஆனால் 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டத்திற்கு 15 சிக்சர்கள் பறக்கின்றன என்பதை இங்குள்ள சிறுவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டு வர்த்தகத்தில் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய சந்தையாகும். அங்கு பேஸ்பால், கூடைப்பந்து மற்றும் அமெரிக்க கால்பந்து விளையாட்டுகளுக்கே மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. தற்போது வரை அங்கு குடியேறிய ஆசிய, ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க மக்களே கிரிக்கெட்டை அதிகம் பார்க்கின்றனர்.
இந்த நிலையை மாற்றி, அமெரிக்க மக்களையும் கிரிக்கெட் பக்கம் ஈர்க்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2024ல் அங்கு டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தியது. மேலும், அங்குள்ள மேஜர் லீக் தொடரை நடத்தி வருவதுடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பிரத்யேக மைதானங்களையும் ஐசிசி உருவாக்கி வருகிறது.
அமெரிக்க மேஜர் லீக் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அணுகுமுறை மூலம், அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஒரு பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என அவர் நம்புகிறார்.
கிரிக்கெட் என்ற பெயரைத் தவிர்த்து, டி20 என்ற சுருக்கமான மற்றும் வேகமான வடிவத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், அமெரிக்க இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும், இது விளையாட்டின் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த உத்தியாக அமையும் என்றும் பாண்டிங் தனது பேட்டியில் விரிவாகக் கூறினார்.
