ஐபிஎல் 2026 தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 254/5 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார்.
255 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் விரைவில் வீழ்த்தப்பட்டனர். ராகுல் தெவாட்டியா அரைசதம் அடித்தாலும், குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், தர்மசாலா ஆடுகளத்தை குறை கூற மறுத்துவிட்டார். 'நாங்கள் 12 அல்லது 13 ஓவர் வரை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தோம். ஆனால் எங்களுடைய ஃபீல்டிங் தரம் வாய்ந்ததாக இல்லை. சில கேட்ச்களை தவறவிட்டோம், கிரவுண்ட் ஃபீல்டிங்கும் சரியாக அமையவில்லை' என்று அவர் கூறினார்.
'அழுத்தமான சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஏற்பட்ட சுணக்கமே இந்தத் தோல்விக்குக் காரணம். இதை நாங்கள் மறந்துவிட்டு, மொஹாலியில் புதிதாகத் தொடங்க விரும்புகிறோம். ஃபீல்டிங் தவறுகள் குறித்து அணி கூட்டங்களிலும், பயிற்சி அமர்வுகளிலும் விவாதிப்போம். இன்று எங்களுக்கான நாளாக அமையவில்லை. எங்களிடம் வேகம் இருந்தது, ஆனால் அழுத்தமான தருணங்களில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை' என்றும் கில் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்த சாய் சுதர்சன் விக்கெட் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்த, அடுத்ததாக மொஹாலியில் நடக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடவுள்ளது.