இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க நகை கடன்கள் வழங்குவதில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வணிக மற்றும் கிராமப்புற வங்கிகள் பின்பற்றக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதமாக இருந்த கடன் வழங்கும் வரம்பு, இனி ரூ.2.5 லட்சம் வரை 85 சதவீதமாகவும், ரூ.5 லட்சம் வரை 80 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு 75% கடன் வழங்கப்படும். கடன் தவறினால், வாடிக்கையாளர்களுக்கு முறையான அறிவிப்பு வழங்கிய பின்னரே நகைகள் ஏலம் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும் பலர் நகைக்கடனை நாடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், சீரான நடைமுறைகளை உருவாக்கவும் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடன் பெறுபவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.
சிறு கடன் பெறுபவர்களுக்கு அதிக கடன் தகுதி கிடைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி அடுக்குமுறை கடன்-மதிப்பு விகித (LTV) கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, தங்கத்தின் மதிப்பில் எவ்வளவு சதவீதம் கடன் வழங்க வேண்டும் என்பதில் பழைய 75% என்ற பொதுவான வரம்பை மாற்றி, கடன்தொகைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் மூலம், சிறு கடன் பெறுபவர்கள் முன்பை விட அதிக தொகையைக் கடனாகப் பெற முடியும்.
புதிய விதிமுறைகளின்படி, ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் பெறலாம். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்குவோருக்கு தங்கத்தின் மதிப்பில் 80% வரை கடன் கிடைக்கும். ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுவோருக்கு அதிகபட்சமாக 75% மட்டுமே கடன் வழங்கப்படும். ரூ.2.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் பட்சத்தில், கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்த நபரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
தங்கத்தின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்கள், தங்கத்தின் உண்மையான தூய்மையின் அடிப்படையில் அதன் மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். ஹால்மார்க் மற்றும் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் இயந்திரங்கள் மூலம் மட்டுமே தங்கம் மதிப்பிடப்படும். தங்க நகைகளில் உள்ள விலையுயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான கூலி ஆகியவை கடனுக்கான மதிப்பில் சேர்க்கப்படாது. தங்கத்தின் உண்மையான எடைக்கும், தூய்மைக்கும் மட்டுமே கடன் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் கடன் தொகையைச் செலுத்தத் தவறினால், நகைகளை ஏலம் விடுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன்பு, வங்கிகள் வாடிக்கையாளருக்கு முறையான முன்னறிவிப்பு மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டும். ஏலத்திற்கான குறைந்தபட்ச தொடக்க விலை தற்போதைய சந்தை மதிப்பில் 90%க்குக் குறைவாக இருக்கக்கூடாது. ஏலம் விடப்பட்டு, கடனை விடக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை வங்கி, 7 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
வாடிக்கையாளர் கடனை முழுமையாக அடைத்தவுடன், அதே நாளில் அல்லது அதிகபட்சமாக 7 வேலை நாட்களுக்குள் அடகு வைக்கப்பட்ட நகைகளை வங்கி திருப்பித் தர வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், வங்கி வாடிக்கையாளருக்குத் தினமும் ரூ.5,000 வரை அபராதம் வழங்க நேரிடும். மேலும், புதிய தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதற்காக தங்க நகைக்கடன் பெறுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக வணிக நடவடிக்கைகளைத் தடுக்க RBI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த புதிய நடைமுறைகள், தங்கத்தின் மீதான கடன் வாங்குதலை மேலும் வெளிப்படையானதாகவும், தடையற்றதாகவும், கடன் வாங்குபவருக்கு உகந்ததாகவும் மாற்றுவதை உறுதி செய்கிறது. கடன் விதிமுறைகள், வட்டி விகிதம் மற்றும் ஏல விதிகள் போன்ற விவரங்கள் வாடிக்கையாளருக்குப் புரியும் பிராந்திய மொழியிலேயே எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
