நெல்லை வண்ணாரப்பேட்டை ஐயப்பன் மஹாலில் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வருவாய்த்துறை முன்னாள் அமைச்சரும் அதிமுக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடு குறித்து காரசாரமாக விமர்சித்தார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் விசுவாசத்தின் அடிப்படையில் வெற்றி வேட்பாளரை அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரியத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் மின்வெட்டு நிலவுவதாக கூறினாலும், அதை அவர் ஏற்க மறுப்பதாகவும், 200 யூனிட் மின்சாரம் என்ற அறிவிப்பு இன்னும் முழுமை பெறவில்லை என்றும் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். கடந்த ஜூன், ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மின்சார கட்டணம் 200 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை காட்டினாலும் அமைச்சர் அதை ஏற்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், அமைச்சர் நிர்மல் குமார் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைப்பதாகவும், இரண்டு லட்சத்தி 22 ஆயிரம் பேர் வேளாண் மின் இணைப்பு கேட்டு மனு செய்தும், அது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தக்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டும், அது வெள்ளை அறிக்கைகளில் காட்டப்படவில்லை என்றும், கடந்த மூன்று மாதங்களில் ஒருவருக்குக் கூட புதிய மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தமிழக அரசு 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் மாற்றம் என்பது தலைமைச் செயலக மாற்றம் மட்டும்தான் என்றும், இதுவே ஒரே சாதனையாக உள்ளது என்றும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார். அமைச்சர்களின் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது என்றும், அவர்கள் ரியாலிட்டியை பேசாமல் ரீலை மட்டுமே பேசுவதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பற்றி பேசாமல் லைக் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார். அமைச்சர்களின் நடவடிக்கையால் பொதுமக்கள் சிரிப்பதா, அழுவதா என்ற நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள எஸ்டாட் போலீஸ், இருசக்கர வாகனங்களில் ரீல் போடுவதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் தமிழர் மானம் காற்றில் பறப்பதாகவும், ஒரு முதலமைச்சரை பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என மற்றொரு முதலமைச்சர் கூறியது சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இதுவே முதல்முறை என்றும், இதைவிட தமிழகத்திற்கு தலைகுனிவு இனி ஏற்படப் போவதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளின் இருப்பை பார்த்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், ஆணையம் கொடுத்த எந்த உத்தரவையும் கர்நாடகா நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார். நீர்வளத்துறை அமைச்சரிடம் என்ன கேள்வி கேட்டாலும் அவரிடம் எந்த பதிலும் இல்லை என்றும், அவருக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். கர்நாடக விவகாரம் குறித்து பேசாத அமைச்சர், ஜனநாயகம் படத்திற்கு பாப்கார்ன் சாப்பிட மட்டுமே வாய் திறப்பதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் ரீல் போடும் அமைச்சரே தவிர ரியல் அமைச்சர் கிடையாது என்றும் அவர் விமர்சித்தார்.
நீர்வளத்துறை அமைச்சருக்கு விஜய் அழைத்து வந்து அழைத்துச் செல்வது மட்டும்தான் தெரியும் என்றும், அதற்காகவே அவருக்கு பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக வெற்றிக்கழக அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லை என்பதை விட அணுகுமுறையே தவறு என்றுதான் சொல்ல வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேச செல்வது பைத்தியக்காரத்தனமான முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.
காவிரி ஆணையம் கொடுத்த உத்தரவை கூட கர்நாடகா நிறைவேற்ற மறுக்கும் நிலையில், கர்நாடக முதலமைச்சரை சந்திக்க செல்வது மோசமான அணுகுமுறையின் காரணமாகத்தான் தமிழகத்திற்கு இந்த தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், காவிரி தண்ணீர் கிடைக்காதது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார். தமிழக அமைச்சரவையின் நடைமுறை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
50 ஆண்டுகள் தீர்க்கப்படாத பிரச்சனையை ஒரு வாரத்தில் தமிழக முதலமைச்சர் தீர்ப்பார் என அமைச்சர்கள் சொல்வது எப்படி சாத்தியம் என்பதை மக்களிடம் கூற வேண்டும் என்றும், எதைக் கேட்டாலும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம் என மட்டுமே அமைச்சர்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் தண்ணீர் கிடைக்காததால் 20 மாவட்டங்கள் குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓட்டு வாங்குவதற்காக சாத்தியம் இல்லாத திட்டங்களை அறிவிக்க மாட்டார் என முதலமைச்சர் மேடைக்கு மேடை பேசியதாகவும், ஆனால் எதுவுமே சாத்தியமாக நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். லஞ்ச ஒழிப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இலவச எண், பீடி கம்பெனிக்கு செல்வதாகவும், இதை சொன்னால் அரசியல் கால் புணர்ச்சி என்று சொல்வதாகவும், ஆனால் அவரது கூட்டணி கட்சியை சேர்ந்த நபரே இதை சொல்வதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் லஞ்சம் ஊழல் ஒழியவில்லை என்றும், ஊழல் லஞ்சம் ஒழிந்ததாக மாயையை கட்டமைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விஜய் பிம்பம் மாயையாக கட்டமைக்கப்பட்டது போல், பஞ்சு டயலாக்கில் பஞ்சராகி போன தமிழகத்தை மாய பிம்பத்தில் கட்டமைக்க நினைக்கிறார்கள் என்றும், தமிழகத்தின் தலையெழுத்து ரயில் செய்தி மட்டும் தான் உள்ளது என்றும் அவர் கூறினார். யார் பார்ட்டி பண்ட் பெற்றார்கள் என இதுவரை தெளிவாக தமிழக முதலமைச்சரோ அமைச்சர்களோ சொல்லவில்லை என்றும், ஏஜெண்டுகள் மற்றும் இன்ப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு பொத்தாம் பொதுவாக மிகைப்படுத்தி அனைத்தும் சொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நடைமுறையில் எதார்த்தம் என்ன என்பதை தமிழக வெற்றி கழகத்தினர் புரிந்து கொள்ளும் வரையில் தமிழகத்தில் கஷ்டம், அவலம், கண்ணீர் போன்றவை தொடர்கதையாகத்தான் இருக்கும் என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

