மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்கள் பரவலாகப் பரவி வருகின்றன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்ற நிர்வாகத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்கள் அமைப்புகளாகவும், தனிநபர்களாகவும் பங்கேற்று ஒரு மாத காலமாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த பேரணிக்கு நேற்று முதலே தடை விதிக்கப்பட்டு, அப்பகுதியில் போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில், பாராளுமன்றத்தை நோக்கி பேரணியைத் தொடங்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசாரும் மத்திய படையினரும் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தடைகள் விதிக்கப்பட்டிருந்தபோதிலும், ஜந்தர் மந்தரில் அதிக எண்ணிக்கையில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியைத் தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர். 'எதனாலும் கரப்பான்பூச்சிகளைத் தடுக்க முடியாது' என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக், பேரணியில் பங்கேற்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் பங்கேற்பதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் ஜந்தர் மந்தருக்குச் சென்றுள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி படையெடுத்துள்ளனர். இந்த உச்சகட்ட போராட்டத்தின் பின்னணியில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு, அவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற யூகங்களுக்கு வலுசேர்த்துள்ளது.

