தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டபோது, அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை ஏடிஎஸ்பி திபு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்கை துருத்தியும், கைகளை ஓங்கியும் மிரட்டும் தொனியில் பேசிய ஏடிஎஸ்பி திபுவின் நாகரிகமற்ற செயலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சக காவல் அதிகாரிகள் அவரைத் தடுக்க முயன்றபோதும், அவர் தொடர்ந்து வரம்புமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு மூத்த காவல் அதிகாரியின் இத்தகைய செயல்பாடு சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரான அப்பட்டமான அத்து மீறலாகும். அவரது நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது' என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், முந்தைய சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தும், இதே போல் ஏடிஎஸ்பி திபு, பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஏ.டி.எஸ்.பி., திபுவின் நடவடிக்கைகள் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக இருப்பதாக பத்திரிகையாளர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி சேகரிப்பதும், பொதுநலன் சார்ந்த நிகழ்வுகளில் தொடர்புடையவர்களிடம் கருத்து கேட்பதும் பத்திரிகையாளர்களின் அடிப்படை தொழில்முறை உரிமையும் கடமையும் ஆகும். அந்தக் கடமையை மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தடுக்க முயல்வது, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏடிஎஸ்பி திபு நடந்துகொண்ட விதம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த, அராஜகமான மற்றும் ஜனநாயக விரோதச் செயலை சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.
ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது. இந்தச் சம்பவம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

