நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் தன்னை தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பொது மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்ததன் பேரில், பத்திரிகைகளில் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல தரக்குறைவான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மனமுடைந்த பாடகி கெனிஷா, ரவி மோகனை விட்டு பிரிவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, மே 16ம் தேதி நடிகர் ரவி மோகன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், 'என் குழந்தைகளை பார்க்கவிடாமல் தடுக்கிறார்கள், எனக்கு அநியாயம் நடக்கிறது' என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்றதாக ஆர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது ரவி மோகன் மன்னிப்பு கோரியதை அடுத்து, வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ரவி மோகன் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதில், '2025ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை மீறி, 2026ம் ஆண்டு மே 16ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் திருமண தகராறு பற்றி கருத்து தெரிவித்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். தன்னுடைய கருத்துகளால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பகிரங்க மன்னிப்பு கோரிய பத்திரிகை ஆவணமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி மோகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.