பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அவரது தந்தையும், மூத்த நடிகருமான சிரஞ்சீவியும் அவருடன் கோவை வந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, சண்டைக் காட்சியில் நடித்தபோது ராம் சரணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அவர் அறுவை சிகிச்சைக்காக கோவை வந்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராம் சரண் சில வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவரது இடது கை மணிக்கட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் 4 முதல் 6 வாரங்கள் ஆகலாம் என்றும், இதற்காக பிசியோதெரபி சிகிச்சையும் தேவைப்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, ராம் சரண் இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர் விரைவில் குணமடைய வேண்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
'பெத்தி' திரைப்படம் விளையாட்டு பின்னணியில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
