பிரபல திரைப்பட நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தான் அரசியலில் ஈடுபடப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'நான் பெரிதும் மதிக்கும் மற்றும் எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து நின்று, தனிப்பட்ட முறையில் நான் செய்து வந்ததை விடப் பரந்த அளவில் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் ஈடுபட வேண்டிய ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 10:00 மணிக்கு அவர் வெளியிட்ட காணொளியில், அரசியல் குறித்த தனது புரிதல், அது தன் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த தன் தாயாரின் பார்வை மற்றும் தன் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான நிகழ்வுகள் குறித்து மனதிலிருந்து பேசியுள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இக்காணொளியை இறுதிவரை பார்த்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
'உங்கள் அனைவரின் ஆசியுடன் நான் இந்த முக்கியமான அடியை எடுத்து வைக்கும்போது, உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்' என ராகவா லாரன்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.