சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இந்த திடீர் மறைவு அரசியல் வட்டாரத்திலும், அவரது குடும்பத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முலாயம் சிங் யாதவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் தற்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் பிரதீக் யாதவ் அரசியலில் இருந்து விலகி, தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் பாஜகவை சேர்ந்த அபர்ணா யாதவை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீக், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், இன்று அதிகாலை மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு, சமாஜ்வாடி கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். சமாஜ்வாடி கட்சியை நிறுவி, நீண்ட காலம் அதன் தலைவராக இருந்தார். 2022 ஆம் ஆண்டு தனது 82 வயதில் அவர் காலமானார். அவரது மகன்களில் ஒருவரான பிரதீக் யாதவின் இந்த திடீர் மறைவு, குடும்பத்திற்கும் கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.