திருநெல்வேலியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் 4400 நாட்கள் ஆட்சி இந்தியாவை உலக அரங்கில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி-நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு ரூ.4000 கோடி செலவில் நிறைவேற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மோடிக்கு தமிழ் மீது தனிப்பட்ட பாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதாகவும், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்தார். இவற்றில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், நிதிநிலையை அறியாமல் தேர்தலின் போது த.வெ.க. வாக்குறுதிகளை அள்ளிவீசியதாகவும், இப்போது அரசிடம் நிதி இல்லை என்பதை வெளிப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வெள்ளை அறிக்கை என்பது காரணங்களை கூறுவதற்காக அல்ல, தீர்வுகளை வழங்குவதற்காக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.