சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் 3வது குறுக்கு தெருவில் வசிக்கும் செல்வி (53) என்பவர் கடந்த 23-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உங்கள் மகன் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துள்ளார். அவரை கைது செய்ய வந்துள்ளோம்' என்று கூறி செல்வியின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றதோடு, உங்கள் மகனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர், செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோன செல்வி, அவர்களிடம் ரூ.70 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன்பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த பிரவின் சுகுமாறன் (43), அம்பத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (33) மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. மேலும், பிரவின் சுகுமாறன் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து, தற்போது வளசரவாக்கத்தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரவின் சுகுமாறன், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களது கூட்டாளிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர்.