தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே திமுக, தவெக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பாமகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
தாராபுரம் தொகுதியில் அதிமுக வலுவாக உள்ள நிலையில், அந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற அதிமுக மற்றும் தவெக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம், மதுராந்தகம் தொகுதியில் சமூக ரீதியிலான வாக்குகளைப் பெறுவதே வெற்றியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் பாமக தனித்து நின்றாலே சுமார் 10% வாக்குகளைப் பெறும் வலிமை கொண்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போதைய சூழலில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 10,000 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய வாக்குகளை யார் தங்கள் பக்கம் ஈர்க்கிறார்களோ அவர்களே மதுராந்தகத்தில் வெற்றி வாகை சூடுவார்கள்.
இதன் காரணமாக, பாமகவின் ஆதரவைப் பெறுவதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸைப் பொறுத்தவரை, அதிமுக உடனான கூட்டணியால் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 2019 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் பாமக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை.
தவெக தலைமையுடன் பாமக நட்புறவுடன் இருந்தாலும், விசிக தற்போது தவெக கூட்டணியில் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. இதனால், பாமக தவெக கூட்டணிக்குள் செல்வது கடினமாகியுள்ளது. மறுபுறம், விசிக கூட்டணியில் இருந்து விலகியிருக்கும் சூழலைப் பயன்படுத்தி, பாமகவை தங்கள் பக்கம் ஈர்க்க திமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தவெகவை வீழ்த்தினால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கடுமையான போட்டியை அளிக்க முடியும் என திமுக கருதுகிறது. மேலும், இது நடிகர் விஜய்யின் அரசியல் பிம்பத்தையும் உடைக்கும் என அக்கட்சி நம்புகிறது. எனவே, பாமகவின் ஆதரவு யாருக்கு என்பதைப் பொறுத்தே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
