பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முதல்வர் விஜய்யின் திட்டத்திற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'ஓமந்தூரார் மருத்துவமனை மாதிரியே இதுவும் ஆகிவிடும்' என்று விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ஜெயக்குமார், பட்டினப்பாக்கம் பகுதியின் கள யதார்த்தங்கள், போக்குவரத்து நெரிசல், மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை முதல்வர் விஜய் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே பணம் இல்லை என்று தவெக அரசு கூறி வரும் நிலையில், ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பது அவசியமற்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அப்பகுதி மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த முடிவால் மீனவர்களும் பொதுமக்களும் கொதித்துப் போயுள்ளதாகவும், தவெக அரசு இந்த முடிவை ஆரம்பத்திலேயே கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடம் தங்களுடையது எனக் கூறி பூர்வகுடி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், சுற்றியுள்ள சுமார் 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே நெருக்கடியான சாந்தோம் சாலைப் பகுதியில் பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதால், புதிய தலைமைச் செயலகம் வந்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் இந்த முடிவு, பள்ளி மாணவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரையும் பாதிக்கும் என்றும், இது ஒரு 'பைத்தியக்காரத்தனமான, முட்டாள்தனமான முடிவு' என்றும் டி. ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். முதல்வர் இது குறித்து ஆழமாக யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, நெரிசல்மிக்கப் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்குப் பதிலாக, சென்னைக்கு வெளியே உள்ள செயற்கைக்கோள் நகரம் (Satellite Town) ஒன்றில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணித்தால், அதிமுக சார்பில் மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் ரூ.900 கோடியில் கட்டப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணமான ரூ.1,200 கோடியை வீணடித்து, நகரின் மையப்பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது முட்டாள்தனமானது. அதற்குப் பதிலாக, நகரத்தின் வெளிப்பகுதியில் (Outskirts) செயற்கைக்கோள் நகரமைப்பு (Satellite Township) அமைத்து, அங்கு அனைத்து அரசு அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து புதிய கட்டடங்களை உருவாக்கலாம். மீனவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அரசு இந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்தால், அது எதிர்காலத்தில் பயன்படாமல் ஓமந்தூரார் வளாகத்தைப் போல ஒரு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகவே (Super Speciality Hospital) உருவெடுக்கும்' என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலக மாற்றம் மற்றும் பட்டினப்பாக்கம் நில விவகாரம் குறித்த அதிமுகவின் இந்த அதிரடி எச்சரிக்கை, தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
