பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – டிஆர்பி ராஜா

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ள நிலையில், இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு கருப்பு நாள் என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது. சென்னைக்கு இரண்டு ஓடுபாதைகளுடன் கூடிய, உலகத்தரத்திலான புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பும், விரிவான திட்டமிடலும் அரசியலுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதன் பாதிப்பை தொழில்துறை வல்லுநர்கள் நன்கு அறிவார்கள். இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அண்டை மாநிலங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை தானாகவே வழங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையின் வளர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இனி மிகப்பெரிய தடைகளை எதிர்கொள்ளும் என்றும், பெரிய விமானங்களை இயக்கக்கூடிய, 4,000 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள இரண்டு இணை ஓடுபாதைகளைக் கொண்ட, உண்மையிலேயே உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் நமக்கு மிக அவசரமாகத் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்த அதிகாரிகளே இந்த முடிவை ஆதரித்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்து சார்ந்த அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்த அவர்கள், தற்போதைய சூழலில் இதைவிடச் சிறந்த மாற்று வாய்ப்பு இல்லை என்பதை நன்றாகவே அறிவார்கள் என்றும் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

சென்னையைச் சுற்றி 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அடையாளம் காண, கிராமங்கள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் தற்போதைய விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் திமுக அரசு அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் விரிவாக ஆய்வு செய்தது. பல ஆண்டுகள் நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு, நீண்டகால விமானப் போக்குவரத்துத் தேவைகளையும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக உள்ள தேர்வுகளில் மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடமாகவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதன் பாதிப்பு ஒரு விமான நிலையத்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்றும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையிலான ஒட்டுமொத்த தொழில் வழித்தடம் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 41% பங்களிக்கும் பகுதி மேலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறந்த துறைமுக இணைப்பு, தொழில்துறைக்குத் தேவையான நம்பகமான நீர்வளக் கட்டமைப்பு, உலகின் முக்கிய நகரங்களுடன் நேரடி விமான இணைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாற்றியிருக்க முடியும்.

காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்க முடியும் என்றும், இத்தனை வாய்ப்புகளும் இப்போது வெறும் அரசியலுக்காக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன என்றும் டிஆர்பி ராஜா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். எங்கள் தலைவர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திமுக-வும், நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றுதான், 'தொழில் வளர்ச்சியை அரசியலாக்குவது, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையே விலையாகக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்'.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள், மூத்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில், அவர்களது கருத்தை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் கேட்டு, இந்த முடிவு உண்மையிலேயே சரியானதுதானா என்பதை நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றை அரசியல் காரணங்களால் தடம் புரள விடக்கூடாது.

சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு புதிய, உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் கட்டாயம் வேண்டும். அரசியலைவிட மாநிலத்தின் வளர்ச்சியையே பொறுப்புள்ள தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம்” என டிஆர்பி ராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் சொத்து என்றும், தவெக அரசு தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version