ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மோசடி கும்பல்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, கமிஷன் அடிப்படையில் வங்கி கணக்குகளை வாங்கி, அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நபர்களுக்கு அனுப்பும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கு மூலம் இணைய மோசடியில் பெறப்பட்ட சட்டவிரோதப் பணம் பெறப்பட்டு, அது கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு மோசடி நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து கேணிக்கரை போலீசார் அந்த வங்கி கணக்கு யாருடையது என விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வங்கி கணக்கு சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (வயது 25) என்பவருடையது என தெரியவந்தது. மேலும், அவர் தனது வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி பணத்தைப் பெற்று, அதை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பி கமிஷன் பெற்று வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதற்காக பெருந்தொகையை கமிஷனாக பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனசேகரனை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களின் குற்றச் செயல்களுக்கு தனது வங்கி கணக்கை பயன்படுத்திக் கொடுத்து கமிஷன் பெற்றதாகவும், மோசடி பணத்தை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்கிற்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்புவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தனசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி அவரை வருகிற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவியதாக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய யுக்திகளைக் கையாண்டு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடும் கும்பலைத் தடுக்கவும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்யவும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்களும் இது போன்ற மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

