காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து, புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அம்மனை வழிபட்டார். ஆதிசங்கர பீடத்திற்கு சென்றபோது, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்களும் பழங்களும் வழங்கப்பட்டன. பதிலுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சங்கராச்சாரியார்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் நிற சால்வைகளை பரிசளித்தார். இதைத் தொடர்ந்து தீப ஆராதனையும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'தமிழ்நாடு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும்' என்ற அறிவிப்பை வரவேற்றுப் பேசினார். எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே பிரதமரின் நிலைப்பாடு என்றும், இதற்கு முன்பும் தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் முறையாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்ட பெரிய திட்டங்கள் உட்பட பல முக்கிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதும் தமிழகத்திற்கு உரிய நிதி உதவிகள் கட்டாயம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்டமன்றத்தில் தற்போதைய முதல்வர் முன்னாள் முதல்வரை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், 'அரசியல் விமர்சனங்களை சட்டமன்றத்தில் செய்யாவிட்டால் எங்கே செய்வார்கள்? எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் விவாதிப்பதில் தவறில்லை' என்று கருத்து தெரிவித்தார். மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிப்பது குறித்த கேள்விக்கு, 'கடன் வாங்குவதன் மூலம் பொதுமக்களுக்கான சொத்துக்களை உருவாக்கி, அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் அளிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், அவை நீண்ட காலத்திற்குப் பயன்படும் வகையில் அமைய வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் பெருகி, அப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படும்' என விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், 'வாங்கிய கடனைக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். நீங்கள் சொத்துக்களை உருவாக்குகிறீர்களா, அதன் மூலம் கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெருகுகின்றனவா? அவ்வாறு இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். பிரதமர் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற மூலதனச் செலவு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். ஆனால் சில மாநில அரசுகள் வருவாய் செலவினங்களில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுப்பது, ஊதியத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளைச் செய்யலாம். ஆனால் நிதிநிலைமை குறைவாக இருக்கும்போது, வாங்கிய கடனை நல்ல சொத்துக்களை உருவாக்கச் செலவிட வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version