தமிழகத்தில் செவிலியர் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்கும் வகையில், 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், ஏற்கனவே உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலை நீடித்தது. அந்த நீண்டகாலப் புறக்கணிப்புக்கு முடிவுகட்டும் வகையில், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 110ஆம் விதியின் கீழ் வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், செவிலியர் படிப்புகளுக்கான அரசாணைகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டான 2026-2027-லிருந்தே தொடங்கப்பட உள்ளன' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 பி.எஸ்.சி. செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் ஆறு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான ரூ.270.26 கோடி செலவினம் முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்தே ஏற்கப்படுகிறது. கல்விக் கட்டிடங்களும் விடுதிகளும் கட்டப்பட்டு வரும் நிலையிலேயே, அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்பொழுது உள்ள இடவசதியில், 600 இடங்களுக்கும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 பி.எஸ்.சி. செவிலியர் இடங்களுடன் ஏழாவது புதிய அரசு செவிலியர் கல்லூரியும் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, டி.ஜி.என்.எம். படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிந்தைய பி.எஸ்.சி. செவிலியர் படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன்மூலம், பெரும்பாலும் கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நமது இளைஞர்கள், செவிலியர் பணிக்கான வாய்ப்பையும், தமிழக மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள். இது செவிலியர் கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
