நீட் தேர்வு அச்சம் மீண்டும் ஒரு மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. கோவையைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவரின் மகள் அனு கீர்த்தனா (19), மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். முதல் முறை நீட் தேர்வு எழுதி பல் மருத்துவப் படிப்பில் (பி.டி.எஸ்.) சேர வாய்ப்பு பெற்றும், மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால், நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு ஜூன் 21 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மறு தேர்வுக்காக அனு கீர்த்தனா தீவிரமாகத் தயாராகி வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அதில், 'தேர்வுக்கு எதிர்பார்த்த அளவு தயாராக முடியவில்லை, அதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாட்ஸ்அப் தகவலைப் பார்த்த அவரது சித்தப்பா, உடனடியாக வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடும்பத்தினர், அனு கீர்த்தனாவை மீட்டு கோவை கணபதி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், தொடர் சிகிச்சைப் பலனின்றி மாணவி அனு கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீட் தேர்வு நெருக்கடியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.