மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மிருணாள்தாய் கோரே மேம்பாலம் திறந்த 2 நாட்களிலேயே தார் உருகி, சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 248 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த மேம்பாலத்தின் தரம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள இந்த மேம்பாலம், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அதன் தார் சாலைகள் உருகி, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி சாலையில் துளைகள் ஏற்பட்டன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மும்பை மேயர் திடீரென மேம்பாலத்தை ஆய்வு செய்தார். தரமற்ற சாலை அமைப்பைக் கண்டறிந்த அவர், உடனடியாக சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்திலேயே இப்படிப்பட்ட தரக்குறைவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவான மற்றும் தரமான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.