இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனக்கு இடம் கிடைக்காத நிலையிலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்குழுவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம், தனக்கு வாய்ப்பு மறுத்த தேர்வுக்குழுவை பழிவாங்கும் நோக்கில் ஷமி தனது உள்ளூர் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் போட்டிகளில் ஷமி விளையாடவில்லை. இதற்கு முன்னர், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் பங்கேற்றார். அதன் பிறகு, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, இந்திய அணியில் பல வீரர்கள் காயமடைந்த போதிலும், முகமது ஷமியை மீண்டும் அணிக்குள் கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை கட்டமைக்கும் பணிகளில் இந்திய அணி ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. மேலும், காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவிற்கு மாற்று வீரரைத் தேடும் பணியிலும் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், முகமது ஷமியின் பெயர் தேர்வுக்குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் அகர்கர், ஷமியின் வாய்ப்பு குறித்து பேசுகையில், அவர் உடற்தகுதியுடன் இல்லை என்று தெரிவித்தார். ஆனால், முகமது ஷமி கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அளவில் நடைபெற்ற அனைத்து உள்நாட்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, தொடர்ந்து விக்கெட்களையும் வீழ்த்தி வருகிறார்.
முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றால், எப்படி அவர் இடைவிடாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தேர்வுக்குழுவுக்கு முதல் சிக்கலாக உள்ளது. மேலும், இந்திய அணியில் தற்போது சரியான அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இருக்கும் ஒரே அனுபவ வீரர் பும்ரா மட்டுமே. அவருக்கும் அடிக்கடி காயம் ஏற்பட்டு பல தொடர்களில் விளையாட முடியாத நிலை உள்ளது.
பும்ராவிற்கு அடுத்தபடியாக, முகமது சிராஜ் மட்டுமே இந்திய அணியின் நம்பிக்கையாக இருக்கிறார். ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் போன்ற சில வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தாலும், அவர்களின் அனுபவம் மற்றும் ஃபார்ம் ஆகியவை பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், 7 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்திய ஷமிக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் ஷமியை தேர்வு செய்யாமல் இந்திய அணி விளையாடி, அதில் தோல்வியடைந்தால், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைப்பார்கள். ஷமி தொடர்ந்து 2-3 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி வருவதைச் சுட்டிக்காட்டி, தேர்வுக்குழுவை கேள்வி கேட்பார்கள். இதனால், ஷமி தேர்வுக்குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்.

