இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூலை 10ஆம் தேதி நியூசிலாந்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்து செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடிக்கு பெற்றுத் தருகிறது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது சமூக வலைதளப் பதிவில், 'இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். மேலும், நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா மிகவும் முக்கியமானது' என்று குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் கையெழுத்தான நியூசிலாந்து-இந்தியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் நியூசிலாந்திற்கு அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஜூலை 10ஆம் தேதி நியூசிலாந்தின் முக்கிய நகரமான ஆக்லாந்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு நாள் முழுவதும் பல்வேறு அரசு முறை நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், ஜூலை 11ஆம் தேதி இந்தியா திரும்புகிறார். கடைசியாக 1986ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்திற்குச் சென்றார். அதற்குப் பிறகு, சரியாக 40 ஆண்டுகள் கழித்து இப்போது பிரதமர் மோடி அந்நாட்டிற்குச் செல்கிறார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, நியூசிலாந்து பிரதமருடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் பலப்படும் என நம்பப்படுகிறது.