‘பிக்பாஸ், சீரியல் பார்த்தவர்கள் இன்று சட்டசபையைப் பார்க்கிறார்கள்’ என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களிலும் மாற்றம் வந்தால் மட்டுமே முழுமையான மாற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார். அப்போது அவர், 'யாராவது லஞ்சம் வாங்கினால் தைரியமாக சொல்லுங்கள்' என்று முந்தைய எந்த அரசும் சொல்லாத ஒன்றை நாங்கள் சொல்லி இருக்கிறோம். நமது முதலமைச்சர் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறார். ஆனால், உங்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது. மாற்றம் என்பது முழுமையாக நடக்க வேண்டுமென்றால், அந்த அதிகாரமும் நம் கையில் இருக்க வேண்டும்.
லஞ்சம் வாங்கினாலும், தவறு செய்தாலும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். இதற்கு முன்பு பணம் இருந்தால் மட்டுமே சட்டமன்றத்திற்குள் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று, அந்த குறுநில மன்னர்களின் ஆதிக்கத்தைத் தாண்டி, சாமானிய மக்களும் சட்டமன்றத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். பிக்பாஸ் மற்றும் சீரியல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்று நேரடியாக சட்டசபையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று அவர் கூறினார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, நாம் காண விரும்பும் முழுமையான மாற்றம் நிகழும் என்றும் அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். சாமானிய மக்களும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது ஜனநாயகத்தின் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
