தனியார் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு இடம் பெயர்வதாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எந்தவொரு நிறுவனமும் குறுகிய காலத்தில் திடீரென முடிவெடுத்து தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளாது என்றும், அவ்வாறு சில நிறுவனங்கள் சென்றாலும், அது பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவாகத்தான் இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும், இந்த துறையை தனக்கு வழங்கி பெண் இனத்தையே பெருமைப்படுத்திய முதலமைச்சருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
மேலும், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், ராமேஸ்வரம் அருகிலும் புதிய விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் 'வெற்றி டபுள் ஃபோர்டிஃபைட் சால்ட்' (Vettri Double Fortified Salt) என்ற இருவித செறிவூட்டப்பட்ட உப்பு, நியாய விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயனடைவார்கள்.
உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகை, ஆண்டுக்கு ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பால் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதற்கான ரூ.16.78 கோடி செலவை அரசே ஏற்கும்.
விழுப்புரம் ஓமந்தூர் பகுதியில் 229 ஏக்கர் பரப்பளவில், ரூ.146 கோடி மதிப்பில் சிப்காட் நிறுவனம் ஒரு புதிய தொழிற்பூங்காவை அமைக்கவுள்ளது. இந்தப் பூங்காவில் அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் ரூ.1,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 3,200 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காக்களில், ரூ.224 கோடி செலவில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug & Play) உருவாக்கப்படும். மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பான தங்குமிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இரண்டாம் கட்டமாக, 2,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கட்டிடம் ரூ.130 கோடியில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
