முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவியில் இருக்கும் வரை, கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இது தொடர்பாக மேலும் கூறுகையில், 'முதலமைச்சர் விஜய் அவர்கள் இருக்கும் வரை, கர்நாடகாவால் மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது. அணை கட்டும் முயற்சியும் ஒருபோதும் வெற்றி பெறாது' என்று குறிப்பிட்டார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளில், தமிழகப் பிரதிநிதிகள் கர்நாடகாவுக்குச் செல்வது என்பது வழக்கமான நடைமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஜெ. ஆட்சி காலத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் கர்நாடகாவுக்குச் சென்றிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்பது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிலத்தடி நீர் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதன் மூலம் மக்களுக்கு சீரான முறையில் தண்ணீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அரசியல் சூழல் குறித்துப் பேசிய அமைச்சர், பல கோடி ரூபாய் செலவழித்தும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தடுமாறும் கட்சிகள் மத்தியில், வெறும் 76 ஆயிரம் ரூபாய் செலவில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறக்கூடிய ஒரு வரலாற்றுச் சாதனையை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில்தான் காண முடியும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். இது தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் தனிச்சிறப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

