தமிழகத்தில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், தமிழகத்தில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 400-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமா படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவில் சரிந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 22,600 இடங்களில் வெறும் 12,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்த தொடர்ச்சியான மாணவர் சேர்க்கை சரிவு காரணமாக, நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை.
இந்தக் கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்களை மூடும் பட்சத்தில், அங்கு பணிபுரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மேலும், மூடப்படும் 70 கல்வி நிறுவனங்களில் பிற வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து படித்து வந்தால், அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

