இந்திய சினிமாவின் பெருமையை பறைசாற்றும் வகையில், இசைஞானி இளையராஜா இசையமைத்த மராத்தி திரைப்படம் 'கோந்தல்', வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99வது ஆஸ்கர் விருது விழாவில் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவில் போட்டியிட இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், நாடு முழுவதும் பரிசீலிக்கப்பட்ட 33 திரைப்படங்களில் இருந்து, பி.சேஷாத்ரி தலைமையிலான இந்திய திரைப்பட கூட்டமைப்பின் (FFI) நடுவர் குழுவால் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நடைபெறும் 'கோந்தல்' என்ற பாரம்பரிய சடங்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு, இந்தியத் திரையுலகிற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மராத்தியில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்ற 'கோந்தல்' திரைப்படம், அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் அவர்களின் திறமையான இயக்கத்தில் உருவானது. 'சுமன்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இஷிதா தேஷ்முக் நடித்துள்ளார். இவர்களுடன் கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசைஞானி இளையராஜா தனது மேதாவிலாசமான இசையை வழங்கியுள்ளார்.
'கோந்தல்' என்பது மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் வழிபாட்டு முறையாகும். இந்த கலை வடிவத்தின் பின்னணியில், வசதியான ஒருவரைத் திருமணம் செய்துகொண்டும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கும் 'சுமன்' என்ற இளம் பெண்ணின் கதையை இப்படம் சித்தரிக்கிறது. யதார்த்தமான கதைக்களம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்த இப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று பல விருதுகளையும் வென்றுள்ளது.
குறிப்பாக, 56-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான 'வெள்ளி மயில்' விருதை இயக்குநர் சந்தோஷ் திவாகர் வென்றார். இந்த அங்கீகாரங்களைத் தொடர்ந்து, தற்போது 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக 'கோந்தல்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குச் செல்கிறது. இது மராத்தி சினிமாவின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் 4-வது மராத்தி திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வு, இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய தரத்தையும், திறமையையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இளையராஜாவின் இசையும், படத்தின் கதையும் சர்வதேச அரங்கில் நிச்சயம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
