தனி சின்னத்தில் போட்டியிட மமக முடிவு: ஜவாஹிருல்லா விளக்கம்

சென்னை: தேர்தல் ஆணையத்தால் பதிவு ரத்து செய்யப்பட்ட சூழலில், மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) பதிவை மீட்டெடுக்க தனி சின்னத்தில் போட்டியிடுவது அவசியமாகிவிட்டது என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் மமகவுக்கும் பிரிவை உண்டாக்கும் நோக்கில், உண்மையற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. திமுகவுக்கும் மமகவுக்கும் இடையிலான உறவு வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல, அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும்' என குறிப்பிட்டுள்ளார்.

'மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோதும், மமக கொள்கை உணர்வோடு திமுக கூட்டணியில் நிலைத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மமகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், திமுக கூட்டணியின் வெற்றிக்காக மமக தொண்டர்கள் உழைத்தனர். அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாட்டின் சூழலைக் கருதி, மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக மமக தொண்டர்கள் உழைத்தார்கள்' என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

'2021 சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாகை, மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் வெற்றி பெற்றோம். இந்நிலையில், தொடர்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்ட சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, கட்சியின் பதிவை மீட்க தனி சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே கட்சி உயர்நிலை குழுவின் ஐந்தாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று அவர் விளக்கினார்.

'முதல் நான்கு தீர்மானங்களைப் பற்றி எழுதினால் அது திமுக மமக உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதாலோ என்னவோ, ஐந்தாவது தீர்மானத்தை மட்டும் தனியாக எடுத்து திரிபுவாத பரப்புரை செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் முதல் பல்வேறு தருணங்களில் திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம். எனவே, தேவையற்ற விமர்சனங்களை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடர்ந்து இணைந்து களமாடுவோம்' என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version