குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்

கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே, ஐபிஎஸ் அதிகாரி அருணை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதாக விளக்கமளித்துள்ளது.

சென்னை கொளத்தூரில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக கூறி, கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் சட்ட உத்தரவு குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், அதை பிறப்பித்த அப்போதைய சென்னை மாநகர காவல் துறை ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.அருணை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆணையர் அருண், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் ஆஜரானார். நீதிமன்றத்தின் சம்மனை வழங்கச் சென்ற அதிகாரியை இரண்டு மணி நேரம் காக்க வைத்த ஊழியர் குறித்தும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நீதிமன்ற ஊழியரை காக்க வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், அருண் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்ததால் அவர் வருவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தனது 28 ஆண்டு கால அனுபவத்தில் தன் மீது எந்த புகாரும் இல்லை என்றும், சில சமூக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் அருண் தெரிவித்தார். மேலும், சந்தோஷ் சர்மா போலி கையெழுத்து மூலம் தொடர் மோசடிகளில் ஈடுபட்டதாலேயே அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாகவும் அவர் கூறினார். சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெரிவிப்பதற்காகவே அருணை ஆஜராக உத்தரவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version