தமிழகத்தில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெறும் இந்த இடைத்தேர்தல், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளையும், கொள்கைகளையும் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதில் த.வெ.க. தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இந்த இடைத்தேர்தலில், அந்தந்த தொகுதிகளில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வும் தீவிரமாக உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்ய, இன்று முக ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தி.மு.க. இரண்டாம் இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தால் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள் என்றும், தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் முடிவை தி.மு.க. தலைமை எடுத்திருப்பதாக தெரிகிறது.
நாளை அல்லது நாளை மறுநாள் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள், தற்போதைய ஆட்சியின் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

