சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் குஷ்பு மற்றும் நிர்வாகிகள், முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "ஆட்சிக்கு வந்து 10 நாட்களிலேயே மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? முதல்வருக்கு அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
"சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கஷ்டப்படும் தயாரிப்பாளர்களின் நலனுக்காக சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வரும், அமைச்சர் ராஜ்மோகனும் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்யை எனது தம்பி என்று சொல்வதில் பெருமையாக உள்ளது. ஒரு அக்கா போல அவரை இப்போது பார்த்தது உணர்வுப்பூர்வமாக இருந்தது" என்று குஷ்பு கூறினார்.
"அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது, நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார் எனத் தெரிகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிகவும் கஷ்டமான விஷயம். சமூகத்தில் இது போன்ற மிருகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தையும் சரிப்படுத்த வேண்டுமென்றால் எப்படி முடியும்? இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மாற்றி மாற்றி ஆட்சி செய்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? முதல்வருக்கு அதற்கான நேரத்தை கொடுங்கள்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
"உங்கள் தந்தையும், நீங்களும் இத்தனை ஆண்டுகளாக கொண்டு வர முடியாத மாற்றத்தை விஜய் பத்து நாட்களில் எப்படி கொண்டு வர முடியும்? நிச்சயமாக மாற்றம் வரும். அதற்காகத்தான் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று குஷ்பு தெரிவித்தார். மேகதாது அணை விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.