தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாசகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமான புத்தகத் திருவிழா நேற்று (மே 15) கோலாகலமாகத் தொடங்கியது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசிஐ அமைப்பு இணைந்து நடத்தும் இந்த இலக்கியத் திருவிழா, செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள ஹாலில் நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹுமான்சூ மங்கள் குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி இந்த புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார். இந்த புத்தகத் திருவிழா மே 26ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை வாசகர்களுக்காக திறந்திருக்கும். இங்கு நாவல்கள், வாழ்க்கை வரலாறு, மருத்துவம், இலக்கியம், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வு நூல்கள் என 10,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், இங்கு விற்பனையாகும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழாவையொட்டி, மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 'நீங்கள் விரும்பும் ஓவியம்' என்ற தலைப்பில் எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், 'புத்தகம் என்ன செய்யும்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், திருக்குறள் எழுதும் போட்டியும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெறுபவர்களுக்குப் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும். மேலும், ரூ.1,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு 'வாசிப்பு செம்மல்' சான்றிதழும், ரூ.2,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு 'வாசிப்பு சிகரம்' சான்றிதழும் வழங்கப்படுகிறது. வாசகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்க, குலுக்கல் முறையில் 3 பேருக்குப் புத்தகங்கள் பரிசாகவும் அளிக்கப்பட உள்ளன.
புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு ஜே.சி.ஐ. தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துசெல்வம், வி.எஸ்.பாபு, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா வரவேற்புரை ஆற்றினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரவி மாணிக்கம், கண்ணன், முத்து முருகன், நடராஜன், காளியப்பன், கனகசபாபதி மற்றும் ஜே.சி.ஐ. நிர்வாகிகள் செல்வலட்சுமி, வர்ஷன், மீனா, வெங்கடேஸ்வரி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இறுதியில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.