கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பள்ளியரக்கல் பகுதியில் உள்ள ஒரு பொது கிணறு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பகவதியம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த கிணறு, பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு தெரு நாய் எதிர்பாராத விதமாக இந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

நாயின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே வந்து பார்த்தபோது, தத்தளித்துக் கொண்டிருந்த நாயைக் கண்டனர். நாயை மீட்க சிலர் கிணற்றுக்குள் இறங்கியபோது, தண்ணீரில் நூற்றுக்கணக்கான ஆமைகள் நீந்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஆமைகள் ஒரே கிணற்றில் இருப்பது வியப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலருக்கு தகவல் தெரிவித்தனர். கவுன்சிலர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க, வனத்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் உதவியுடன், வனத்துறையினர் கிணற்றுக்குள் இருந்து மொத்தம் 53 ஆமைகளை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அனைத்து ஆமைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன.

பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால், வயல்வெளிப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிணற்றில் போதுமான தண்ணீர் இருந்துள்ளது. இதனால், ஆமைகள் நீண்ட காலமாக அங்கேயே வசித்து வந்துள்ளன. கிணறு பொதுமக்களின் பயன்பாட்டில் இல்லாததால், இதுவரை யாரும் ஆமைகளின் இருப்பை அறிந்திருக்கவில்லை. நாயை மீட்கச் சென்றபோதுதான் இந்த அதிசய நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மீட்கப்பட்ட ஆமைகள் வனத்துறையினரால் பாதுகாப்பான சூழலில் விடுவிக்கப்பட்டன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version