தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் கேரளா மாநிலம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். மலைகளின் பிரதேசமான கேரள மாநிலத்திற்கு கட்டுமான பணிகளுக்கு தேவையான கனிம வளப் பொருட்களை கொண்டு செல்வதில் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இருந்துதான் 90% கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதால், கேரளாவில் கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக முடங்கிப் போயுள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்தில் இருந்து மீண்டும் கனிம வளப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே தமிழக அரசு இந்த தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்டுமான கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கேரளாவில் நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு தேவையான ஜல்லிக்கற்களை தமிழகத்திலிருந்து தடையின்றி கொண்டு செல்ல அனுமதிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், புதிய போக்குவரத்து விதிகளால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் கட்டுமான கற்களின் வரத்து குறைந்துள்ளதால், பணிகள் முடங்கியுள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார். இந்த தடையால் கேரளாவின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானத் துறையும் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
