கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி சென்னை பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
செப்டம்பர் 20-ந் தேதி இடுக்கி மாவட்டம் வட்டவாடா அருகேயுள்ள கொட்டக்கம்பூர் பகுதியில் பெய்த பெருமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக கொட்டகை மீது மண் விழுந்தது. இதில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சின்னு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலகிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள் படுகாயமடைந்துள்ளார்.
இதேபோல், கோட்டயம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. வாகமன் சுற்றுலா சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த சங்கீதா அருள் லால் என்ற பெண், வேலத்துச்சேரி பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். சாலையில் மண் சரிந்து விழுந்ததில் சங்கீதா மண்ணுக்குள் புதைந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு பெண் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும், கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு மண்ணுக்குள் புதைந்தது. இதில் 80 வயதான ஜோசப் என்பவர் உயிரிழந்தார். அவரது இரண்டு மகள்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கனமழையால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

