கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் 7 வயது சிறுமி, 2 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை என அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 26-ம் தேதி பார்வையற்ற தாயின் உடலும், 2 வயது மகனின் உடலும் மூவாற்றுப்புழை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி தந்தையின் உடலும் மீட்கப்பட்டது. இன்று காலை, 7 வயது மகளின் உடலும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வாடகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருந்த குடும்பத்தினர், இது தொடர்பாக கோத்தமங்கலம் காவல் நிலையத்தை அணுகி நிதி உதவி கோரியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று இடம் மாற்றும் பணிகளும் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், அதற்குள் குடும்பத்தினர் இந்த கொடூர முடிவை எடுத்திருப்பது வேதனையளிப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள போலீசார், இது இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.