கேரள மாநிலம் கோட்டயம் அருகே சாத்தமங்கலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வினீஷ் மற்றும் அஞ்சு தம்பதியினரின் ஒரு வயது பெண் குழந்தையின் உடலில், விலா எலும்பு அருகே ஊசி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தை, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சில மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது. வீடு திரும்பிய பிறகு, குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையின் வலது விலா எலும்பு பகுதியில் வீக்கம் இருப்பதை பெற்றோர் கவனித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் அது சாதாரண வீக்கம் என்றும், விரைவில் சரியாகிவிடும் என்றும், குழந்தைகள் அசவுகரியங்களால் அழுவது இயல்பு என்றும், வீக்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். மருத்துவர்களின் கூறியதை நம்பி பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல குழந்தையின் விலா எலும்பு பகுதியில் இருந்த வீக்கம் அதிகரித்தது. வலியால் குழந்தை தொடர்ந்து அழுததால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் குழந்தையை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்ததில், குழந்தையின் விலா எலும்புக்கு அருகே ஊசி ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் வினீஷ் மற்றும் அஞ்சு கூறுகையில், 'கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த இந்த ஓராண்டு காலத்தில், வேறு எங்கும் எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே நிகழ்ந்துள்ளது' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உடலில் ஊசி நீண்ட காலம் இருந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
