தமிழக அமைச்சரவை கூட்டங்களிலும், அரசு நிகழ்வுகளிலும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு என்ற தனிநபர்கள் சட்டவிரோதமாக பங்கேற்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், 'முதல்வர் அறையை ஒட்டியே இருவருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அரசு ரகசியங்களை தெரிந்துகொள்வதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 'ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ஆகியோர் அரசு ஊழியர்களா? அல்லது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதவிகளை வகிக்கிறார்களா?' என்றும் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த தனிநபர்களின் பங்கேற்பு, முதல்வர் விஜய் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, அரசு தகவல்களை கசியவிட்டதாகக் கூறப்படும் பொது ஊழியர்கள் மற்றும் முதலமைச்சரின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை கூட்டங்களில் தனிநபர்களின் தலையீடு குறித்தும், அரசு ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிஜிபி எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.