உங்கள் வீட்டில் வாங்கும் கொத்தமல்லி இலைகள் சில நாட்களிலேயே வாடி, கருப்பாகி வீணாகி விடுகிறதா? இனி கவலையை விடுங்கள். கொத்தமல்லி இலைகளை ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாகப் பாதுகாப்பாக வைப்பதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்கு காண்போம்.
சந்தையில் இருந்து வாங்கும் கொத்தமல்லி கட்டுகளில் பாதியை சமையலுக்குப் பயன்படுத்திய பின், மீதமுள்ளதை ஃபிரிட்ஜில் வைத்தால், அது இரண்டே நாட்களில் வாடி, கருப்பாகி, அழுகிப் போவது பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மென்மையான மூலிகைகளில் ஒன்றான கொத்தமல்லியை, பலர் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரிட்ஜின் காய்கறி டிராயரில் வைத்து விடுகின்றனர். இந்த முறை அதன் ஆயுளை அதிகரிப்பதற்குப் பதிலாக, விரைவில் அழுகச் செய்துவிடும்.
கொத்தமல்லி இலைகளைச் சேமிக்கும் முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஒரு கட்டு கொத்தமல்லியை சில நாட்களுக்குப் பதிலாக வாரக் கணக்கில் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும். இந்த முறைகள் மூலம், இனி ஒரு இலை கூட வீணாகாது.
சேமிப்பதற்கு முன் முழுமையாகக் காயவைப்பது மிகவும் அவசியம். கொத்தமல்லியில் ஒட்டியிருக்கும் அழுக்கு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அகற்ற, அதை நன்கு கழுவிய பிறகு, ஒரு சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரில் பரப்பி, காற்றில் முழுமையாகக் காயவிட வேண்டும். காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் பொறுத்து, இது காய 1 முதல் 3 மணிநேரம் வரை ஆகலாம். இலைகள் அல்லது தண்டுகளில் சிறிதளவு ஈரம் இருந்தாலும், அது இரண்டே நாட்களில் அழுகி, கொழகொழப்பாக மாறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிவிடும். வெறும் துணியால் துடைப்பது மட்டும் போதாது, அது காற்றில் முழுமையாகக் காய நேரத்தைக் கொடுப்பதே உண்மையான வித்தியாசத்தைத் தரும்.
கொத்தமல்லியை ஒரு பூக்கடைக்காரர் பூக்களைக் கையாளுவது போலப் பராமரிப்பது மிகவும் பயனுள்ள வழியாகும். இது வெறும் சமையலறை வதந்தி அல்ல, ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை. கொத்தமல்லி தண்டுகளின் அடிப்பகுதியைச் சிறிதளவு வெட்டிவிட்டு, ஒரு ஜாடியில் ஒரு அங்குல அளவிற்குத் தண்ணீர் ஊற்றி, அதில் கொத்தமல்லிக் கட்டை செங்குத்தாக நிமிர்த்தி வைக்கவும். பின்னர், அதன் இலைகளை ஒரு பிளாஸ்டிக் பையால் தளர்வாக மூடி, முழு ஜாடியையும் ஃபிரிட்ஜில் வைக்கவும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுவது, அது துர்நாற்றம் வீசாமல் இருக்க உதவும். இந்த ஒரு முறை மூலம் கொத்தமல்லியை கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
ஃபிரிட்ஜில் இடம் குறைவாக இருந்தாலோ அல்லது தண்ணீருடன் கூடிய ஜாடியை வைப்பது சிரமமாக இருந்தாலோ, அதற்கு ஈடான பலனைத் தரும் மற்றொரு முறை உள்ளது. இலைகள் முழுமையாகக் காய்ந்ததும், அவற்றை ஒரு டிஷ்யூ பேப்பரில் தளர்வாகச் சுற்றி, காற்றுப் புகாத டப்பாவிலோ அல்லது ஜிப்லாக் பையிலோ வைத்து, அதிலுள்ள அதிகப்படியான காற்றை வெளியேற்றி மூடவும். காலப்போக்கில் சேரும் கூடுதல் ஈரப்பதத்தை டிஷ்யூ பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும். பொதுவாக இந்த ஈரப்பதமே சாதாரண டப்பாவில் வைக்கும் போது இலைகள் கருப்பாகவோ அல்லது கொழகொழப்பாகவோ மாறக் காரணம். சரியாகச் செய்தால், இந்த முறையில் கொத்தமல்லியை 1 முதல் 3 வாரங்கள் வரை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் வாங்கும் கொத்தமல்லி இலைகளை நீண்ட நாட்களுக்குப் ஃப்ரெஷ்ஷாகப் பயன்படுத்தலாம். இதனால், உணவுப் பொருட்கள் வீணாவதும் குறையும், உங்கள் சமையலும் மேலும் சுவையாக அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App – Android or iOS.Follow us:

