வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக, அன்றாட உணவில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்ப்பது உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, கருப்பட்டியில் உள்ள சத்துக்கள் சருமத்தை பொலிவுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளை சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால் உடலுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றாக, வெல்லம் அல்லது கருப்பட்டியைப் பயன்படுத்தும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கருப்பட்டியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
கருப்பட்டியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, பொலிவு கூடும். மேலும், சரும சுருக்கங்கள் ஏற்படுவதையும் இது தடுக்கிறது. வயதாகும்போது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் பொலிவிழப்பு போன்ற பிரச்சனைகளை கருப்பட்டி எதிர்கொள்ள உதவும்.
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம், உடலின் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இது நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் துணைபுரிகிறது. மேலும், கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களை உடலுக்குப் பெறலாம்.
இயற்கையாகவே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு. இதன் 'கிளைசீமிக் இன்டெக்ஸ்' (Glycemic Index) அளவு, வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது உடலில் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளும் அளவோடு பயன்படுத்தலாம்.
மேலும், ஆரோக்கியம் மிக்க கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும் அபாயம் உள்ளது. அன்றாட உணவில் கருப்பட்டியைச் சேர்ப்பதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
இறுதியாக, கருப்பட்டி எந்தவிதமான இரசாயனக் கலப்படமும் இன்றி தயாரிக்கப்படுவதால், இது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. எனவே, வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.

